சென்னையில் நில அதிர்வு – முழு விவரம்
Chennai Earthquake News: சென்னையில் நேற்றைய காலை எப்போதும் போல இல்லை. படு பிஸியாக அவரவர் படிப்பிடங்களை நோக்கியும் அலுவலகங்களை நோக்கியும் போய்க்கொண்டிருந்த மக்கள் ஓரிரு வினாடிகள் பீதியில் உறைந்து போனார்கள்.
காலை 7.02 மணியளவில் சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர்அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ள இந்த அதிர்வு 2-3 வினாடிகள் மட்டுமே நீடித்துள்ளது. குறிப்பாக தியாகராய நகர், போரூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் இந்த நில அதிர்வை மக்கள் அதிகம் உணர்ந்துள்ளனர்.
சென்னையிலிருந்து 609 கிலோமீட்டர் தொலைவில் மத்திய மேற்கு வங்க கடலுக்குள் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்துள்ளது. அந்தமான் மற்றும் சென்னையில் இதன் தாக்கம் பதிவாகியுள்ளது. வானிலை மையத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
உயிர் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனினும் இந்த திடீர் நில அதிர்வு சென்னை மக்களை திடுக்கிட வைத்து விட்டது என்றே சொல்லலாம்.
நில அதிர்வு குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதால் வெளி ஊரில் உள்ள மக்கள், சென்னையில் வசிக்கும் தங்களது சொந்தங்களின் நலன் பற்றி பயந்து போயினர். அவரவர் சொந்தபந்தங்களின் பாதுகாப்பு பற்றி விசாரிப்பதிலேயே தொடங்கியது நேற்றைய நாள். இன்றும் மக்கள் காலை சற்று பீதியுடனேயே தங்கள் அன்றாட வேலைகளை தொடங்கியுள்ளனர்.