ஜாக்டோ- ஜியோ போராட்டம்- கடந்து வந்த பாதையும் தற்போதைய நிலையும்
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதியில் இருந்து ஜாக்டோ – ஜியோ (அரசு ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள்) அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு இவர்கள் போராடுவது முதல் முறை அல்ல எனினும் இம்முறை இந்த போராட்டத்தின் வீரியம் சற்று அதிகமாக இருப்பதய் உணர முடிகிறது. இதன் தாக்கம் பொது மக்களின் மனதில் பல விதமான கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒன்பது அம்ச கோரிக்கைகள்:
- 2003 க்கு மேல் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து , பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். அதன் மூலம் முழு பென்ஷன் தொகையும் அரசின் கஜானாவில் இருந்து அரசால் செலுத்தப்படும்.
- தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
- நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ; தமிழக அரசு பணியிடங்களை குறைத்து , அரசு துறைகளை அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அரசு ஆணை எண் 56 ஐ ரத்து செய்ய வேண்டும்.
- 3500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.
- அங்கன்வாடி மையங்களில் எல் கே ஜி மற்றும் யு கே ஜி வகுப்புகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.
- ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
- சிறப்பு கால முறை சம்பளம் பெற்று வரும் அங்கன்வாடி , சத்துணவு , வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
- 21 மாத சம்பள மாற்ற நிலுவை தொகை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
- தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை படுத்தி சம்பளம் வழங்க வேண்டும்.
தமிழக அரசின் பதில்:
மேற்க்கூறிய கோரிக்கைகளை தமிழக அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி தற்போதைய தினம் வரை ஏற்று கொள்ளவில்லை. பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கும் நீதி மன்ற உத்தரவுகளுக்கும் பிறகு தற்காலிகமாக இப்போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேலையில் இப்போராட்டம் நடந்து கொண்டிருப்பது மாணவர்கள் மத்தியில் சஞ்சலத்தையும் பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதை மனதில் கொண்டு விரைவில் இரு அமைப்புகளும் அரசும் சேர்ந்து ஒரு நிரந்தர முடிவை எட்ட வேண்டும் என்பது சாமானியர்களின் குரலாக உள்ளது.