Pulwama Terror Attack: மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் மத்திய, மாநில கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என்று நாடே பரபரப்பான சூழ்நிலையில் இயங்கி வருகிறது.  இதனிடையே, சற்றும் எதிர்பாராத விதமாக நேற்று ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பயங்கரமான தீவிரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவ படை வீரர்கள் 2,547 பேர் 78 வாகனங்களில் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியை அவர்கள் அடைந்திருந்த நிலையில் திடீரென்று 360 கிலோ வெடிபொருட்கள் நிரம்பிய கார் ஒன்று அவர்கள் பயணித்து கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது குறிவைத்து மோதியது. காரில் இருந்த வெடிபொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியதில் ராணுவ வீரர்கள் 44 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னணியில் யார்?

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்- இ- முகமது என்கின்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு 1998 ஆம் ஆண்டு மசூத் அஜார் என்பவனால் தொடங்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிடமிருந்து பிரித்து பாகிஸ்தானுடன்  இணைப்பதையே குறிக்கோளாக கொண்டு இயங்கி  வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த இருபது வயதே ஆன அதில் அஹமத் தர் என்பவன் தான் நேற்று காஷ்மீரில் தற்கொலை தாக்குதலை நிகழ்த்தியுள்ளான். இவன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த அமைப்பில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இவனோடு சேர்த்து இதுவரை மூன்று பேரை இந்த அமைப்பு மூளை சலவை செய்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தி உள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்:

இந்த நிலையில் பாதுகாப்பு படைக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தது. அதற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானிற்கு மறைமுகமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “நீங்கள் பெரிய தவறு இழைத்து விட்டீர்கள். அதற்கு பெரிய விலையை நீங்கள் திருப்பி கொடுக்கச்செய்வோம். உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்த படுவார்கள்” என்று கூறினார்.

டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமதுவை வெளியுறவுத்துறை அமைச்சர் அலுவலகம் அழைத்து தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அதேபோல பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி அஜய் பிசரியாவை தாக்குதல் குறித்து ஆலோசனை செய்ய டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, நேபால், ரஷ்யா என உலக நாடுகள் பலவும் இந்தியாவிற்கு தங்களது ஆறுதலையும் பாகிஸ்தான் சார்ந்த அமைப்பு நிகழ்த்தியுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க “இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பால் தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்” என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பற்றாக்குறைதான் காரணமா?!

2547 ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் நீண்ட பயணம் செய்தது தமிழ்நாட்டிலோ கேரளாவிலோ இல்லை; ஜம்மு காஷ்மீரில். அதை மனதில் கொண்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க பட்டிருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க பாதுகாப்பு பற்றாக்குறையால் நிகழ்ந்தது. யாரென்றே தெரியாத ஒருவன் திடீரென்று எங்கிருந்தோ காரில் வெடிபொருட்களுடன் வந்து நேரடி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறான் என்றால் அந்த இடத்தில் பாதுகாப்பு என்பது எவ்வளவு வலுவில்லாமல் இருந்திருக்கும். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று மக்களிடையே கேள்வி அலைகள் அடித்து கொண்டிருக்கிறது.

#indiaseeksjustice

நாட்டு மக்கள் அனைவரும் மொழி, மத, கட்சி, கலாச்சார சார்புகள் இன்றி ஒருமித்த குரலில் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். நம்மை தாக்கியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று.

என்ன செய்யப்போகிறது அரசு? பார்ப்போம் பொறுத்திருந்து.

India Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்.  Pulwama Terror Attack