தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேரில் சந்தித்தார். இவர்கள் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளும் இடம் பெற்றுள்ளதால் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து இருப்பார்கள் என கருதப்படுகிறது.
Pattali Makkal Katchi
அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் தோற்கடிப்போம், காடுவெட்டி குருவின் குடும்பத்தார் ஆவேசம்
பாமகவின் மூத்த நிர்வாகி காடுவெட்டி குருவின் குடும்பத்தார் அண்மையில் செய்தியாளரை சந்தித்தனர். அப்போது பாமகவின் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை நாங்கள் நிச்சயம் தோற்கடிப்போம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து குருவின் தாயாரே போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அண்மையில் அவரது குடும்பத்தினர் “ மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம்’’ என்ற அமைப்பை துவங்கினர். அப்போது நூறுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குருவின் மகன் கனலரசன் கலந்து கொள்ளவில்லை. இதற்கு பதிலளித்த அவரது குடும்பத்தினர் கனலரசன் மீது ராமதாஸ் குடும்பத்தாரால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவரை அழைத்து வர வில்லை என கூறினர். மேலும் குருவின் உடல் மோசமான சூழ்நிலைக்கு சென்ற நிலையிலும் அவரை கண்டுகொள்ளாது ராமதாஸும் , அன்புமணியும் இருந்தனர். வெளிநாட்டிற்கு அழைத்து சென்ற மருத்துவம் பார்க்கலாம் என தொடர்ந்து சொல்லி வந்தனர். ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார். குருவை ராமதாஸ் குடும்பத்தினர் கொன்றுவிட்டனர் என ஆதங்கப்பட்டனர்.
பாமக தலைவர் ஒரு சந்தர்பவாதி
தேர்தல் வரும் சமயத்தில் எங்கு சேர்ந்தால் லாபம் என்றே ராமதாஸ் யோசிப்பார். திமுகவையும், அதிமுகவையும் விமர்சித்துவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்தால் பாமக நிர்வாகிகள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். கடந்த 30 வருடங்களாக குரு பாமகவுக்கும் வன்னியர்கள் நலனுக்காகவும் உழைத்து வந்தார். இதனால் பெரும்பாலான பாமக தொண்டர்களின் ஆதரவு எங்கள் குடும்பத்தினர்க்கு தான் என்றும் தெரிவித்தனர். ராமதாஸ் குடும்பம் எங்களை தொடர்ந்து அச்சுருத்தி வருகிறது. அதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என கூறினார். வரும் மக்களவை தேர்தலில் அன்புமணியை தோற்கடிப்போம். அதில் உறுதியாய் உள்ளோம் என்றனர்.
மூத்த நிர்வாகி குரு இருக்கும் வரை பாமக தலைமையோடு நெருக்கமாக இருந்தார் குரு ஆனால் அவர் மறைந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எதனால் இப்படி என்ற கேள்வி மக்களின் மனதை சுற்றி சுற்றி வருகிறது. குருவின் குடும்பத்தாரின் கருத்துக்கள் தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிதம்பரம் தொகுதியில் பாமக விடுதலைச் சிறுத்தைகள் நேரடிப் போட்டி
மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட உள்ளது. அதே சமயம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேரடியாக களம் காணும் என தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இயல்பாகவே வார்த்தைப் போர் நடைபெறும் சூழலில் தற்போது நேரடியாக களம் காணுவதால் யார் வெற்றி பெறுவார் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பாமக-விற்கு எந்தெந்த தொகுதிகள்?
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை சிதம்பரம், தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், திண்டுக்கல், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ஆரணி தொகுதியை பொறுத்தவரை சௌமியா அன்புமணி அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ்க்கு அழைப்பு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இன்று கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்வு சென்னை வண்டலூர் அருகே நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அழைக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வரவேற்றனர். ஆகையால் இன்றைய நிகழ்வில் ராமதாஸ் அவர்கள் நிச்சயம் பங்கேற்ப்பார் என தகவல் வெளியாகியுள்ளன.
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் ராமதாஸ் கணிப்பு
Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இடம்பெற்றுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவும் எங்கள் கூட்டணிக்கு இணைவார்கள் என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வேளையில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் இல்லத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு விருந்து
Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விருந்திற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று முதல்வர் துணை முதல்வர் அமைச்சர் பெருமக்கள் வருகை புரிந்தனர். மக்களவைத் தேர்தல் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விவாதித்ததாக தெரிகிறது.
உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?
Lok Sabha Election 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தொகுதி பங்கீடு குறித்த விவரம்
பாமக – 7
பாஜக 5
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.
இணைந்தது பாமக
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.
கைகோர்த்த பாஜக
ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.
தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?
இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.
திமுக கூட்டணிக்கு சவாலா ?
இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.
யாருக்கு எந்த தொகுதிகள் ?
அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.
மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.
நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?
மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.
Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?
Lok Sabha Elections 2019 : பியூஷ் கோயலுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு
Lok Sabha Election 2019 Alliance: இன்று காலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, பாமகவிற்கு 7 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஸ், ஆகியோர் சந்திப்பு நடைபெறுகிறது, பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.
Lok Sabha Elections 2019 : உறுதியானது அதிமுக பாமக கூட்டணி
Lok Sabha Election AIADMK – PMK Alliance: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாமாகவும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாமகவிற்கு என துணை முதல்வர் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடக்க இருக்கும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக- பாமக கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாயின. அதனை திமுகவோடு தற்போது ஏற்கனவே கூட்டணிக் கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக எதிர்த்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாமக… திமுகவை ஒழிக்கவும் தயங்காது என்று கூறிய அவர் பாமக சாதியக் கொலைகளை வெளிப்படையாக ஆதரிக்கும் கட்சி என்று சாடினார்.