Lok Sabha polls

யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைந்தது அந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உட்பட சில கட்சிகள் இருக்கின்றன. யாருக்கு எந்த தொகுதிகள் என்பதை ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமையகம் வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக தொகுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னம் முடக்கம்

நாம் தமிழர் கட்சி இதுவரை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது ஆனால் போதிய வாக்கு சதவீதம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கான புதிய சின்னத்தை கேட்டு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இன்று அதிமுக தாமாக கூட்டணி அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், உட்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உடன்பாடு எட்டப் படலாம் எனவும் தெரிகிறது.

சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம்

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற அதிமுகவினர் நாளை விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர், மேலும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேர்காணல் நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றவுடன் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி வேல்முருகன் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என நிறுவன தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் அந்த முடிவினை இரு கைவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.

மதிமுவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்க வாய்ப்பு

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு மக்களவைத் தொகுதியம் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து மு க ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த ஒரு தொகுதியிலும் வைகோ போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகிறது, மாறாக ராஜ்யசபா சீட்டிற்கு வைகோ முயற்சிப்பார் என தெரிகிறது.

வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடுகிறார் தினகரன்

AMMK: நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமமுக ஆலோசனை கூட்டம் அக்கட்சி துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் எந்த முடிவும் எட்டப்படாததால் கூட்டணிக்கு வருவதை தவிர்த்துவிட்டன. மேலும் 18 தொகுதிக்கான வேட்பாளர்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மிக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி ஆதரவளிப்பார் என நம்புகிறேன், கமல் பேச்சு

வருகின்ற மக்களவை தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலிலும் நான் போட்டியிடபோவதில்லை என அண்மையில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் எனவும் கூறினார். இந்த வேளையில் ரஜினி எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனக்கு நம்பிக்கையுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற மக்களவை தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட போகிறேன், எந்த தொகுதி என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

மக்களவைத் தேர்தலில் பிரெய்லி வாக்காளர் சிலிப்

வரும் மக்களவைத் தேர்தலில் பார்வை இழந்தவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் வாக்களிக்க வசதியாக பிரெய்லி வாக்காளர் சிலிப் அளிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 5 மாநிலங்களில் நடைபெற்ற பேரவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனை வரும் மக்களவைத் தேர்தலிலும் அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வசதியாக அமையும்.