IAF strikes Pakistan: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மரணமைடைந்தனர். இந்த நிகழ்வு நாட்டு மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த தருணத்தில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாமை இந்திய இராணுவம் தகர்த்துள்ளது சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தக்க பதிலடி தந்த இந்திய விமானப்படை.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தவறு செய்தவர்கள் நிச்சயம் பதில் சொல்ல நேரிடும் என கூறியிருந்தார். இந்தியா சார்பாக பதிலடி கொடுக்கப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது இந்திய விமானப்படை.
தாக்குதல் நடந்தது எப்படி?
இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசி தகர்த்தது. இந்திய விமான படையின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆயிரம் கிலோ அளவிலான வெடிபொருட்கள் மற்றும் ஆறு குண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப் பட்டதாக தெரிகிறது. தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாபெரும் ஆறுதல்
இந்த நிகழ்வு கடந்த வாரம் மரணமடைந்த 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இது ஆறுதலாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் இந்திய விமானபடைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியா மீது கைவைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எதிரிகளை எச்சரிக்கும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.
அடுத்து என்ன ?
முதலில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு இந்திய இராணுவத்தை தாக்கியது. அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை அந்நாட்டு தீவிரவாத அமைப்பை தாக்கியது. இதோடு நிற்குமா அல்லது மாறி மாறி தாக்குதல் நடைபெறுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மக்களை பொருத்தவரை சுமூகமான சூழல் தான் தேவை.
இரு நாட்டு போரில் இந்தியா வெற்றி என்ற செய்தியை விட இந்தியாவில் அமைதியான சூழல் நிலவுகிறது என்ற செய்திதான் மகிழ்ச்சியை தரும். மேலும் சில கட்சிகள் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது என்பதே மக்களின் ஒருமித்த கருத்து.