தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த விஸ்வாசம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் வெலிவந்து 10 வாரம் ஆகியும் இன்னும் ஒரு சில திரையரங்கில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது. தற்போது 10 வது வாரத்தை தொட்டுள்ள விஸ்வாசம் பட சென்னை ரோகினி திரையரங்கில் திரைபடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக மேலும் 2 ஷோவை அதிகரித்துள்ளது.
புரிந்து கொள்ளாமல் பிரிந்த காதல் மனைவியுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் புரிந்து கொண்டு இணையும் கணவரும், “குழந்தைகளை அவர்களது இஷ்டப்படி வளர விடுங்கள், அவர்கள் மீது உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள்” என அந்த கணவர் சொல்லும் மெஸேஜும்தான் படத்தின் கதை. இந்த படத்தின் முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
தலைக்கு வகிடெடுத்தாலும் அரிவாளால்தான் எடுப்பார்கள் போலிருக்கிறது. அப்படியொரு வில்லேஜ். அங்குதான் தூக்கு துரையாக தொடை தட்டுகிறார் அஜீத். ‘உங்களுக்கு தேவை முகம்தானே… பார்த்துக்கோங்க…. ரசிச்சுக்கோங்க…. வேணும்னா மூணு வேளையும் அர்ச்சனை கூட பண்ணிக்கோங்க. அதை தாண்டி மேக்கப் பற்றியெல்லாம் நோ அலட்டல்’ என்கிற தத்துவத்துடன் அறிமுகம் ஆகிறார் அஜீத்.
முதல் பாதி முழுக்க அஜீத்தை அணுஅணுவாக ரசிக்கும் அவரது ரசிகர்களுக்காக என்பதால், ஒவ்வொரு கமர்ஷியல் சினிமாக்கள் போன்று நகர்கிறது படம்.
அந்த ஊருக்கு மெடிக்கல் கேம்புக்காக வரும் நயன்தாராவுக்கு நேர்கிற சிலபல இன்னல்களை சொடக்கு போடுகிற நேரத்தில் விரட்டியடிக்கிறார் அஜீத். அவ்ளோ படிச்ச டாக்டர், ஒரு படிக்காத மேதையை கட்டிக்கொள்ள விரும்புகிறார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிறைவேற… ஒரு சின்ன சோகத்துடன் கதை மும்பைக்கு ஷிப்ட் ஆகிறது. அப்புறம்தான், இந்த கதை இப்படியே போனால் விவேகத்தின் பெருமைக்கு(?) இடைஞ்சலாகிவிடும் என்று உணர்கிறார் சிவா. செகன்ட் ஆஃப் முழுக்க உணர்ச்சிக்குவியல். ஒரு அப்பாவாக அஜீத் நின்று அடித்து விளையாடியிருக்கிறார்.
குறிப்பாக மகள் அனிகாவுக்கு நேர்கிற பிரச்சனையை நொடியில் புரிந்து கொள்ளும் அவர், ஒரு அரணாக நிற்கும் அழகும், அந்த கம்பீரமும் கைதட்டல் மழையை கொட்டுகிறது தியேட்டரில். ஃபைட் காட்சிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்கிற ஏக்கத்தையும் தருகிறது அஜீத்தின் மின்னல் தெறிப்பு. ‘அப்பா…’ என்று மகள் அனிகா அழைக்கும்போது ‘என் சாமீ’ என்று அஜீத் நெஞ்சுருகி கரைகிற காட்சியில் கண்கலங்காத உள்ளங்கள் இவ்வுலகில்இருக்க முடியாது எனலாம்.
நயன்தாரா வழக்கம் போல தனது மெச்சூரிடி நடிப்பால் பிரமாதப்படுத்துகிறார். அதுவும் தன் மகளுக்கு முன் இவர்தான் அப்பா என்பது தெரியாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்த கண்கள் ரசிக்க வைக்கிறது.
இவ்விருவருக்கும் இணையாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார் அனிகா. அந்த விஸ்தாரமான கிரவுண்டில் நிஜமாகவே ஓடிக் களைக்கிறாள் குழந்தை. உணர்ச்சி பீறிட வைக்கும் கதைக்கு பொருத்தமான முகம்.
ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஆனால் , அவரது அஜீத் மகள் மீதான கோபம் நியாயமே இல்லாதது என்பது படத்திற்கு பலவீனம்.
தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கின்றனர்.
மொத்தத்தில் விஸ்வாசம் படத்தால் ”சிவா இஸ் பேக் வித் சக்செஸ்”