தமிழகம்

இன்று கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டக் கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ப்பு

கடந்த மாதம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூடுகின்றன. இன்று மதியம் நடக்க இருக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, தேவகவுடா, பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் சார்பில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.

தம்பிதுரை கருத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவையில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பேசுகையில் மாநில அரசின் நிதியை பெற மாநில அரசுகள் மத்திய அரசிடம் பிச்சை எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். நேற்று சட்டமன்றத்தில் பேசிய ஜெயக்குமார் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் சதி நடக்கிறது – ராமதாஸ்

பேரறிவாளன் நளினி முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 151 நாட்கள் ஆகிவிட்டன. எனினும் இந்த விஷயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு இருப்பது நியாயமில்லை. அதில் ஏதோ சதி இருப்பதாகத் தோன்றுகிறது. ஒருபுறம் அற்புதம்மாள் நீதி கேட்கும் பயணத்தை மேற்கொள்ள மறுபுறம் சிறையில் நளினியும் முருகனும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.