Petta Movie Review: “பேட்ட” ஒரு வசூல் “வேட்ட”
Banner | Sun Pictures |
Cast | Rajinikanth, Vijay Sethupathi, Nawazuddin Siddiqui, Sasikumar, Simran, Trisha Krishnan, Megha Akash, Bobby Simha, Y.G. Mahendran |
Direction | Karthik Subbaraj |
Production | Sun Pictures |
Music | Anirudh Ravichander |
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளமை துள்ளலான தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படமே பேட்ட. நண்பன் குடும்பத்தை கொலை செய்தவர்களை தன் உயிரையே பணயம் வைத்து பழிக்கு பழி வாங்கும் நண்பன் கேரக்டரில் நடித்துள்ள ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
மலைப்பிரதேச பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்ற பெரிய இடத்து பிள்ளை பாபி சிம்ஹா. அவர் டேஸ்காலர் என்றாலும் , கல்லூரி ஹாஸ்டலையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தன் நண்பர்களுடன் ஜுனியர்களை ராகிங் என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறார். இந்த கல்லூரியில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து முதல் ஆண்டில் சேர்ந்து படிக்கும் இளம் லவ்வர்ஸ் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் கூட பாபியின் ராகிங்கில் சிக்கி வருத்தமான சூழலில் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு, மினிஸ்டர் ரெக்க மென்டேஷனில் வார்டனாக ரஜினிகாந்த் வருகிறார். பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, அவரை கல்லூரியிலும் சஸ்பென்ட் செய்ய வைத்து, அவரது அப்பா ‘ஆடுகளம்’ நரேனின் கல்லூரி கேன்டீன் மற்றும் ஹாஸ்டல் மெஸ் கான்ட்ரக்ட்டையும் ரத்து செய்து, கல்லூரி ஹாஸ்டலையே தன் கட்டுப்பாட்டில் வைக்கிறார்.
இப்படி, காளி – ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபியும் அவரது அப்பா ஆடுகளம் நரேனும், சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணி ஒரு நாள் ஆட்களை அனுப்புகிறார்கள். அதே நாளில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நவாசுதீன் சித்திக்கும் அவரது மகன் விஜய் சேதுபதியும் ஆட்களை அனுப்பி, சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, பாபி சிம்ஹா அன்ட் கோவினருடன் கைகோர்த்துக் கொண்டு சனத் ரெட்டியை எப்படி காப்பாற்றுகிறார்? தனது மதுரை கோட்டையை பேட்டயை விட்டுவிட்டு வெறும் ஹாஸ்டல் வார்டனாக மினிஸ்டர் சிபாரிசில் வரும் ரஜினி, ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? இவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் …? படத்தில் சசிக்குமாரின் ரோல் என்ன ..? அதன் பின்னணியில் ? நடந்தது என்ன ..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது பேட்ட படத்தின் மீதி கதை.
ரஜினி. படம் முழுக்க பாயும் புலியாக காளியாக, பேட்ட வேலனாக பக்கா மாஸ் காட்டியிருக்கிறார். படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை அழகாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். 80களின் ரஜினியை பார்க்க ஆசைப்பட்டோருக்கு இந்த படம் ஒரு தலைவாழை இலை விருந்து எனலாம். மதுரை கிராமத்து கெட்-அப், இளமையான முறுக்கு மீசை தோற்றம், நடுத்தர வயது ஹாஸ்டல் வார்டன் என அசத்தியிருக்கிறார் ரஜினி.
சிம்ரன், திரிஷா இருவருமே ரஜினி ஜோடியாக முதல்முறையாக திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை அழகாக நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் ரொம்ப நாளுக்கு அப்புறம் தன் நடை, உடை, பாவனை மற்றும் நடனத்தில் ரசிகர்களின் இதங்களை ரொம்பவே ஈர்க்கிறார்.
விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் இருவருமே பழிக்கு பழி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் இஸ்லாமிய நண்பராக, மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார் சசிகுமார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம், இவர் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார் எனலாம்.
மொத்தத்தில் “பேட்ட” ஒரு வசூல் “வேட்ட” என்றே சொல்லலாம்.
இப்படி ஒரு படம் தான் வேண்டும் என்பது தீவிர ரசிகர்களின் வேண்டுகோள்.