திமுக – காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீடு உறுதியானது
Lok Sabha Elections 2019: திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையிலான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது . நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி சந்தித்து வந்த நிலையில், தற்பொழுது அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதன்படி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், புதுச்சேரி உடன் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸிற்கு ஒதுக்க பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு கூட்டணியில் உள்ள மற்ற மாநில கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும் என்றும், தேமுதிக உடனான கூட்டணி பற்றி விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியிருக்கும் நிலையில், தற்பொழுது திமுக காங்கிரஸிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருப்பது தமிழகத்தில் காங்கிரஸின் மீதான மக்களின் பார்வை சாதகமாக இருப்பதை கருத்தில் கொண்டு திமுகவால் எடுக்கப்பட்ட முடிவு என்றே சொல்லலாம்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகளை எதிர்த்து போட்டியிட்டு வெல்ல திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குளறுபாடுகளும் மன கசப்புகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். அதை உணர்ந்திருக்கும் திமுக தொகுதி பங்கீட்டில் காங்கிரஸிற்கு போதும் என்ற அளவிற்கு அள்ளி வழங்கியிருக்கிறது.