சர்ச்சையான சபரிமலை தீர்ப்பு – மறுசீராய்வு மனு இன்று விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு இருந்த தடையை நீக்கி அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஆணை பிறப்பித்தது. அதிலிருந்து சபரிமலை தன் இயல்பு நிலையை இழந்து விட்டது. பல பெண்களின் தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு இரண்டு பெண்கள் மட்டும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து விட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல பெண்கள் சென்று வந்து விட்டார்கள். இந்த விவகாரம் ஒருபுறமிருக்க, அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் மற்றும் நாயர் சேவா சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டு வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் கீழ் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளது.